திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவை - தமிழ்நாடு அரசு வாதம்

தனி நீதிபதி ஆணையால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.;

Update:2025-12-04 11:32 IST


திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு ஐகோர்ட்டு மதுரை அமர்வு உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றாததால் வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள், மத்திய பாதுகாப்பு படையினருடன் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு சென்று தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன் நேற்று மாலை உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து மனுதாரரான ராமரவிக்குமார், சக மனுத்தாரர்கள், இந்து அமைப்பினர் 60-க்கும் மேற்பட்ட சிஐஎஸ்எப் வீரர்களுடன் நேற்று இரவு திருப்பரங்குன்றம். சென்றனர். முருகன் கோவிலுக்கு அருகிலுள்ள பழனியாண்டவர் கோவில் பாதை வழியாக மலை உச்சிக்கு செல்ல முயன்றனர். அப்போது, அவர்களை அங்கு போலீசார் தடுப்பு வேலிகளை போட்டு மறைத்து அனுமதி மறுத்தனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படவில்லை என்று கூறி இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி முழக்கம் இட்டனர். அப்போது திடீரென தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டக்கார்கள் செல்ல முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒரு காவலர் காயம் அடைந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து தீபம் ஏற்றுவதற்காக சென்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். அதேபோல, போலீசார் தடுப்பை மீறி, மலைப் பாதையில் ஓடிச் சென்றவர்கள் பிடித்து அழைத்து வரப்பட்டனர். மலை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிகப்பட்டது.

ஏராளமானோர் திரண்ட நிலையில், திருப்பரங்குன்றத்தில் கூட்டம் நடத்த தடை விதித்து 144 தடை உத்தரவினை மதுரை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி, பாதுகாப்புக்கு வந்த சிஐஎஸ்எப் வீரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 144 தடை உத்தரவு உள்ளதாலும் அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாலும் மலைக்கு செல்ல அனுமதிக்க முடியாது என போலீஸ் கமிஷனர் கூறினார்.

ஆனால், 144 தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னரே, நீதிபதி உத்தரவு பிறப்பித்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால், அதனை போலீசார் ஏற்கவில்லை. இதனால் இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனிடம் தமிழக அரசு சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் சென்று, திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.

அதற்கு நீதிபதி ஜெயச்சந்திரன், தங்களது முறையீடு சம்பந்தமாக நாளை (அதாவது இன்று) காலையில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடுகையில், “ மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஜி.ஆர். .சுவாமிநாதன். மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும்.

பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன, காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர், மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. தனி நீதிபதி ஆணையால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. 

ஐகோர்ட்டுக்கு பாதுகாப்பு வழங்குவதே CISF-ன் பணி, அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே, அதைத்தாண்டி மனுதாரருக்கு பாதுகாப்பாக அனுப்பியது ஏற்புடையதல்ல. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது முதலில் முடிவு செய்யப்பட வேண்டும். அதன் பின்னரே வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும்.

மலை உச்சியில் உள்ளது தீபத்தூண். கோவில் நிர்வாகம் சார்பில் 100 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோவில் அருகே ஏற்றப்பட்டு வருகிறது. இதை உடனடியாக மாற்ற இயலுமா? நூறு ஆண்டு பழமையான வழக்கத்தை மாற்ற ஒரு நொடியில் முடிவு எடுக்கலாமா? ஒரு இடத்தில் ஒரு தீபம் தான் ஏற்ற வேண்டும் பல தீபங்கள் ஏற்ற இயலுமா?.. 

100 ஆண்டுகளுக்கு மேல் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதில்லை. 1862ல் இருந்து வழக்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை உடனே நடைமுறைப்படுத்த உத்தரவிட தேவையில்லை. தர்கா தரப்பில் மேல்முறையீடு செய்ய போதிய கால அவகாசம் வழங்கவில்லை, 30 நாட்கள் மேல்முறையீடு செய்ய அவகாசம் இருக்கையில் விளக்கம் அளிக்க வாய்ப்பு தரப்படவில்லை.

நீதிபதி சுவாமிநாதனின் செயல்பாடு நீதித்துறை வரம்பிற்கு அப்பாற்பட்டு உள்ளது. அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் செயல்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, “மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய 30 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில் ஏன் உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தாக்கல் செய்தீர்கள்?” என்று மனுதாரருக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

மேலும், கோவில் நிர்வாகம் உத்தரவை நிறைவேற்றாததால்தான் தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தனி நீதிபதி யாரையும் தண்டிக்கவில்லை.  வழக்கு நிலுவையில்தானே உள்ளது?.. மத நல்லிணக்கம் என்பது ஒருவரை ஒன்றும் செய்யவிடாமல் தடுப்பது அல்ல.. இரு தரப்பும் இணைந்து, தங்களுக்கானவற்றை செய்துகொள்வதிலும் செய்ய அனுமதிப்பதிலும்தான் உள்ளது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான அரசின் மேல்முறையீட்டு வழக்கில் இன்றே தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்