தூத்துக்குடி: தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை

ஆழ்வார்திருநகரி அருகே பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2025-05-28 08:24 IST

கோப்புப்படம் 

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே ஆதிநாதபுரம் கரையடியூர் நடு தெருவைச் சேர்ந்தவர் சண்முகநாதன் (52 வயது). விவசாயி. இவருடைய மனைவி சந்திர வடிவு. இவர்களுடைய மகள் ராணி ஸ்வேதா (17). இவர் நாசரேத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து, பொதுத்தேர்வில் 298 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருந்தார்.

தொடர்ந்து ராணி ஸ்வேதா கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பித்து இருந்தார். அவர் பிளஸ்-2 தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் தனக்கு கல்லூரியில் சேர இடம் கிடைக்காதோ? என்ற அச்சத்தில் இருந்தார்.

இதனால் மன உளைச்சலுடன் காணப்பட்ட ராணி ஸ்வேதா கடந்த 25-ந்தேதி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். பின்னர் வீட்டுக்கு வந்த பெற்றோர் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனடியாக மகளை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ராணி ஸ்வேதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்