தூத்துக்குடி: இருதரப்பினர் மோதலில் காயம் அடைந்த வாலிபர் சாவு: 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரை சேர்ந்த வாலிபருக்கும் சந்திராயபுரத்தை சேர்ந்த வாலிபருக்கும் இடையே பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.;
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரை சேர்ந்த சூரியராஜ் மகன் ரெக்சன் (வயது 27). இவருக்கும் சந்திராயபுரத்தை சேர்ந்த ஏசுராஜா என்பவருக்கும் இடையே பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 24ம் தேதி கைபேசியில் பேசிய போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ரெக்சன் தரப்பில், ஏசுராஜாவை முதலூருக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஏசுராஜா, பழனியப்பபுரத்தை சேர்ந்த முருகன் மகன் ஆனந்த்(25) உள்ளிட்ட நான்கு பேர், இரவு முதலூருக்கு வந்துள்ளனர். அப்போது முதலூரில் ரெக்சன் உள்ளிட்ட மூன்று பேர் நின்றுள்ளனர். இருதரப்பினரும் மது அருந்திய போதையில் இருந்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி உள்ளனர்.
இதில் ஆனந்திற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக காயமடைந்த ஆனந்த், அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரெக்சன் உள்ளிட்ட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.