மாநில தகுதித்தேர்வை எழுதி தமிழ் வழி இடஒதுக்கீடு கேட்பவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் - அரசு தகவல்
மாநில தகுதித்தேர்வை எழுதி தமிழ் வழி இடஒதுக்கீடு கேட்பவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.;
சென்னை,
மாநில தகுதித்தேர்வு (டி.என்.செட்) கடந்த மார்ச் மாதம் 6, 7, 8 மற்றும் 9-ந்தேதிகளில் நடந்தது. இந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இந்த தேர்வை எழுதி உள்ள விண்ணப்பதாரர்களில் தமிழ் வழியில் படித்ததற்கான இடஒதுக்கீடு கேட்பவர்கள், தாங்கள் தமிழ் வழியில் 1-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் வரை படித்ததற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்ய அரசு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி, சம்பந்தப்பட்டவர்கள் www.trb.tn.gov.in என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7-ந்தேதி மாலை 5 மணி வரை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த தேதிக்குள் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் படித்ததற்கான முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்திருக்கிறது.