அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள்..மீண்டும் இணைக்க வாய்ப்பா? ஓ.எஸ். மணியன் பதில்
எஸ்.ஐ.ஆர் திருத்தம் எந்தவித ஆபத்தையோ, பாதிப்பையோ ஏற்படுத்தக்கூடியது அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.;
மயிலாடுதுறை,
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மயிலாடுதுறை அருகே வழுவூருக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்பது ஒன்றும் புதிது அல்ல. புதிதாக ஏதோ ஒன்றை தேர்தல் ஆணையம் திணிப்பதாக கருத வேண்டாம். ஏற்கனவே இது நடைபெற்றுள்ளது. தற்போது மீண்டும் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகள் கூறுவது போல இது எந்தவித ஆபத்தையோ, பாதிப்பையோ ஏற்படுத்தக்கூடியது அல்ல. இது நல்ல முறை. வரவேற்கத்தக்கது. ஏற்றுக்கொள்ளத்தக்கது. இதற்கான கால அவகாசம் குறைவாக உள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல.
வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான படிவத்தை பூர்த்தி செய்வதில் கிராம மக்களுக்கு கடினமாக இருக்கும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, இதிலிருந்தே அவர் எதை நோக்கி பயணிக்கிறார் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள முடியும். விண்ணப்பம் மிகமிக எளிமையான வகையில் உள்ளது. சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக அதில் வாக்குச்சாவடி அலுவலரின் எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பம் கடினமாக உள்ளது என்று சொல்வது வினோதமாக உள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஒன்றிணைய வாய்ப்பு உள்ளதா? என்று கேட்டதற்கு பிரிந்து சென்றவர்கள் முதலில் மன்னிப்பு கேட்டு வரட்டும். பொதுச்செயலாளரிடம் அது குறித்து பேசுவோம் .
இவ்வாறு அவர் கூறினார்.