திருப்பூர்: தேசிய நெடுஞ்சாலையில் 4 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து - போக்குவரத்து பாதிப்பு
காரை நிறுத்திய நபருக்கும், மற்ற ஓட்டுநர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.;
திருப்பூர்,
திருப்பூர் செங்கப்பள்ளி அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள பதிவெண் கொண்ட கார் ஒன்று முறையான சிக்னல் கொடுக்காமல் திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் பின்னால் வந்த கார் ஓட்டுநர், அந்த கேரள காரை விடாமல் துரத்தி வழிமறித்து நிறுத்தியுள்ளார்.
காரை தீடீரென நிறுத்தியதால் பின்னால் வந்த கார்கள் அடுத்தடுத்து மோதி நின்றன. இந்த சம்பவத்தில் 4 கார்களுக்கு சேதம் ஏற்பட்டது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இதற்கிடையில், காரை நிறுத்திய நபருக்கும், மற்ற ஓட்டுநர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்தில் சிக்கிய 4 கார்களையும் அப்புறப்படுத்தி, கார் ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.