திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்
திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் போலீசார் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.;
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள்.
இந்த நிலையில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம், மகாதீபம் ஏற்றப்படும் நிகழ்வு வருகிற டிசம்பர் மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ளது.
அன்றைய தினம் திருவண்ணாமலையில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கிரிவலப் பாதையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் போலீசார் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
அப்போது நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பாத்திரக் கடைகள், ஜூஸ் கடைகள், டிபன் கடைகள், இளநீர் கடை போன்ற கடைகளை அகற்றினர். மேலும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை வைக்க கூடாது என்று வியாபாரிகளுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.