தமிழக சட்டசபை தேர்தல்: விருப்ப மனுக்கள் வழங்க கால அவகாசத்தை நீட்டித்தது காங்கிரஸ்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது.;
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, விருப்ப மணுக்களை பெறுதல் என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 10 முதல் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. விருப்ப மனுக்கள் அளிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விருப்ப மனுக்கள் வழங்குவதற்கான கால அவகாசத்தை ஜனவரி 15ம் தேதி வரை நீட்டித்து தமிழக காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில்,
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப மனுக்கள் 31.12.2025 வரை பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை உற்சாகத்துடன் அளித்துள்ளனர்.
மேலும், காங்கிரஸ் கட்சியினரின் வேண்டுகோளுக்கிணங்க, வருகிற (15.1.2026) ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறுவது நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.