டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அய்யா வைகுண்டரை அவமதிக்கும் கேள்வி: அரசியல் கட்சியினர் கண்டனம்
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அய்யா வைகுண்டரை அவமதிக்கும் வகையில் கேள்வி இடம்பெற்றதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.;
சென்னை,
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தாள்-1 தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தியது. இந்த தேர்வுக்கான வினாத்தாளில் ‘பின்வரும் வைகுண்ட சுவாமிகளின் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க' என்ற வினாவுக்கு 4 விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. அதில் முதல் விடையில், ‘முடிசூடும் பெருமாள்’ என்றும், ‘முத்துக்குட்டி’ என்றும் அழைக்கப்பட்டார் என கூறப்பட்டு இருந்தது.
அதுவே ஆங்கிலத்தில் ‘‘முடிவெட்டும் கடவுள் (தி காட் ஆப் ஹேர் கட்டிங்)'' என மொழி பெயர்க்கப்பட்டிருந்தது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இதேபோல் சில வினாக்களிலும் ஆங்கில மொழி பெயர்ப்பு தவறாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அய்யா வைகுண்டரை அவமதிக்கும் கேள்வி கேட்கப்பட்டதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பா.ஜனதா பிரமுகரும், நடிகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டின் முதன்மை அதிகாரிகளையும், அறிவார்ந்த, திறன்வாய்ந்தவர்களை தேர்வு செய்யும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தியது லட்சக்கணக்கான மக்களின் மனதை புண்படுத்தியிருக்கிறது. தேர்வாணைய தரத்தின் மீது நம்பிக்கையற்ற மனநிலை ஏற்படுகிறது. தேர்வு தாமதங்கள், முடிவு தாமதங்கள், தேர்வு வினாத்தாள் கசிவு, முறையற்ற தேர்வு நடைமுறைகள் என பல்வேறு குளறுபடிகள் டி.என்.பி.எஸ்.சி.யில் அரங்கேறி வருவது இது முதன்முறை அல்ல, பலமுறை இதுபோன்ற தவறுகள் நடந்து வருகிறது. கடந்த முறை நடந்த குரூப்-1 தேர்வில் கிறிஸ்துவின் வருகை குறித்த கேள்வி சர்ச்சைக்குள்ளாகியது. தவறை உணர்ந்து டி.என்.பி.எஸ்.சி. மன்னிப்பு கோரவேண்டும்' என்று கூறி உள்ளார்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அறிக்கையில், ‘லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் போற்றி வணங்கும் அய்யா வைகுண்டரை அவமதிக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அறிவிலித்தனமாக மொழிபெயர்த்து கேள்வியை கேட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.' என்று கூறி உள்ளார்.
இந்து முன்னணி
இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கையில், ‘பல லட்சம் மக்களின் மதிப்பிற்கும், வணக்கத்திற்கும் உரிய ஐயா வைகுண்டரை இழிவுபடுத்தும் நோக்கிலேயே இதுபோன்று மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டுகிறோம். காரணம் ஒவ்வொரு தேர்விலும் தி.மு.க., ஈ.வெ.ரா., அண்ணா, கருணாநிதி பற்றி உயர்வான கருத்து திணிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் செய்து வருகிறது. ஆனால் சமயப் பெரியோர்கள் பற்றிய கேள்விகள் தவறான சித்தரிப்பாக இடம்பெற்று வருகிறது என்றால் அரசு பணியில் சேரும் இளைஞர்களுக்கு எத்தகைய சிந்தனையை புகுத்துகிறார்கள் என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது.
இதுபோன்ற மோசமான கேள்வித்தாளை தயாரித்தவர், அதனை சரிபார்த்து அனுமதி அளித்த மேற்பார்வையாளர் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்று கூறி உள்ளார்.