உரத் தட்டுப்பாட்டை போக்க இயற்கை இடுபொருட்கள் பயன்பாட்டை அதிகரிக்க வழிசெய்ய வேண்டும் - ராமதாஸ்
இயற்கை முறையில் விவசாயம் செய்வதற்கு ஊக்கம் அளித்து உரத் தட்டுப்பாட்டிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
வடகிழக்கு பருவ மழைக்காலம் என்பதால் தற்போது சீரான மழைப் பொழிவாலும், பாசன வசதிகளாலும் விவசாயிகள் கடந்த ஆண்டை விட தற்போது அதிக பரப்பளவில் நெல் பயிர் சாகுபடி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் போதுமான உரங்கள் கிடைக்காததால் அல்லாடுகின்றனர். இதனைப் பயன்படுத்தி சிலர் உர விலையை தங்கள் இஷ்டத்திற்கு உயர்த்தி விற்பனை செய்கின்றனர். அரசு உரத் தட்டுப்பாட்டை போக்குகின்ற அதே சமயத்தில், செயற்கை உரங்களுக்கு மாற்றாக இயற்கை இடுபொருட்களை விவசாயத்திற்கு பயன்படுத்த வழிகளை காட்டியும் இயற்கை இடுபொருள்கள் விவசாயிகளுக்கு எளிதாக கிடைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
பசுமை புரட்சி காலத்திற்கு முன்னர் வரை ரசாயன உரங்களின் பயன்பாடு மிக மிகக் குறைவாகவே இருந்தது. விவசாயிகள் பெரும்பாலும் பயிர் வளர்ச்சிகளுக்கு தழைச்சத்து, சாம்பல் சத்து, மணிச் சத்து போன்ற இயற்கை இடுபொருட்களை பயிர்களுக்கு பயன்படுத்தினர். அதிகமான மகசூலுக்காக நெல், கோதுமை விதைகள் விரிவுப்படுத்தப்பட்டதும், பாசன வசதிகள் ஏற்படுத்தப்பட்டதும், ரசாயன உரங்களுக்கான மானியங்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து, செயற்கை உர பயன்பாட்டை விவசாயத்தில் பல மடங்கு அதிகரிக்க செய்துள்ளது.
ரசாயன உரமான யூரியாவில் உள்ள நைட்ரஜன் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும்போது அது ஆவியாகி சுற்றுச்சூழலை பாதிப்பதுடன் மண்வளத்தையும் பாதித்து, மண் மலட்டுத்தன்மை அடைகிறது. நைட்ரஜன் சுற்றுச்சூழலை மட்டுமல்லாமல், நிலத்தடி நீரையும் பாதிக்கிறது. அதனால் ஏற்படும் சுகாதார பாதிப்புகளும் ஏராளம். சுற்றிலும் உள்ள நீர்நிலைகளில் ஊடுருவி அவற்றிலுள்ள நீர் வாழ் உயிரினங்களின் சூழலையும் பாதிக்கிறது. மேலும் நைட்ரஜனில் இருந்து வெளியேறும் நைட்ரஸ் ஆக்சைடு கரியமில வாயுவை விட 300 மடங்கு பசுமை இல்ல வாயுவை பாதிக்கும் தன்மையுடையது.
உலகிலேயே அதிகமாக யூரியா பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் உரம் அதிகம் பயன்படுத்தும் 5 மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது. நெல் சாகுபடி பரப்பு அதிகரிக்கும்போது உரத் தேவையும் அதிகரிக்கிறது. தற்கால அரிசியால் ஆன உணவு மட்டுமே ஆரோக்கியமான உணவு அல்ல என்பதையும், சிறுதானிய வகைகளாலான உணவுகள் ஆரோக்கியமானது என்பதையும் பொதுமக்களிடம் தொடர்ந்து வேளாண்மை துறை அறிவுறுத்தி விளக்க வேண்டும்.
விவசாயிகள் தற்காலத்தில் சிறுதானிய வகைகள், எண்ணெய் வித்துக்கள், தானியங்கள் போன்றவை சாகுபடி செய்வதை குறைத்து வருகின்றனர் அதற்குக் காரணம் அவர்களுக்கு அதில் போதுமான மகசூல் கிடைக்காமல் விவசாயத்தில் நஷ்டம் அடைவதே காரணமாகும். வேளாண்மைத்துறை சார்பில் இயற்கை முறையில் சிறுதானியம் மற்றும் மாற்றுப் பயிர்கள் செய்கின்ற விவசாயிகளுக்கு மானியங்கள் அளித்து இயற்கை இடுபொருட்களை அளித்து இயற்கை முறையில் விவசாயம் செய்வதற்கு ஊக்கம் அளித்து உரத் தட்டுப்பாட்டிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
சிறுதானியங்களை உணவாகவும், ஆரோக்கியமான உணவாகவும் உட்கொள்ள வேண்டிய அவசியத்தை இவைகளை தவிர்ப்பதால் ஏற்படும் உடல்நலக் கேடு குறித்தும் மருத்துவர்கள், விஞ்ஞானிகள், வேளாண் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
உர தட்டுப்பாட்டை போக்குகிற அதே நேரத்தில், வரும் காலங்களில் யூரியாவிலான உரங்கள் பயன்பாட்டை குறைத்து, இயற்கை முறையில் பசுந்தாள் உரம், உயிர் உரம், உயிர்ம உரங்கள் பயன்படுத்தும் அவசியத்தையும், யுக்திகளையும் விவசாயிகளுக்கு கற்றுத் தர வேண்டும். வேளாண்மை விரிவாக்கம் மையங்களில் அவைகள் எளிதாக கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். அதுபோலவே சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பயிரிடுவதற்கு ஊக்கமளித்து, கொள்முதல் செய்யவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.