இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-04-2025

Update:2025-04-03 09:11 IST
Live Updates - Page 3
2025-04-03 04:19 GMT

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டு கருத்தரங்கில் தமிழக மற்றும் கேரள முதல்-அமைச்சர்கள் இன்று பங்கேற்கின்றனர். மதுரையில் கனமழை பெய்துவரும் நிலையில், முதல்-அமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிகழ்ச்சி இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதன்படி, தமுக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவிருந்த சி.பி.எம். கருத்தரங்கு, மழை காரணமாக ராஜா முத்தையா மன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

2025-04-03 04:02 GMT

தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளனர்.

2025-04-03 03:46 GMT

சென்னை - கும்மிடிப்பூண்டி ரெயில் வழித்தடத்தில் பொன்னேரி - கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு இன்று மற்றும் ஏப்ரல் 5 ஆகிய நாட்களில் 21 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

அந்நாட்களில் பயணிகள் வசதிக்காக 10 சிறப்பு ரெயில்கள் சென்னை - எண்ணூர் இடையே இயக்கப்படும் என அறிவிப்பு வெளிவந்து உள்ளது.

2025-04-03 03:43 GMT

பிரதமர் மோடி இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன் ஒரு பகுதியாக இன்று காலை அவர் விமானத்தில் தாய்லாந்து நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். அவர் அந்நாட்டில் நடைபெறும் 6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இதன்பின்பு இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார்.

2025-04-03 03:43 GMT

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்பட 16 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மித அளவிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன்படி, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை பரவலாக மழை பெய்துள்ளது.

சென்னையில் புரசைவாக்கம், எழும்பூர், பம்மல், வேப்பேரி, பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் மழை பெய்தது. குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், தாம்பரம், ஆலந்தூர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. சென்னையில் சில இடங்களில் சாரல் மழையும் பெய்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அனகாபுத்தூர், புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

தென்தமிழகத்தில் சிவகங்கைக்கு உட்பட்ட காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்துள்ளது. திண்டுக்கல், மணிக்கூண்டு, என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. புதுக்கோட்டையில் அரிமளம், பொன்னமராவதி, திருமயம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால், அந்த பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்