பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நிகழ்வு, ஜன., 13ல் துவங்கியது. வரும் 26ம் தேதி வரை இந்த நிகழ்வு நடக்க உள்ள நிலையில், இதுவரை 32 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் மகா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மகா கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜுக்கு பிரதமர் நநேர்ந்திர மோடி வந்தார். திரிவேணி சங்கமத்தில் அவர் புனித நீராடினார். முன்னதாக மோட்டார் படகில் கும்பமேளா நடக்கும் இடத்தில், அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உடன் பார்வையிட்டார்.
பின்னர் அவர் பிரயாக்ராஜில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டார். மேலும் ஆரத்தி காட்டி வழிபாடுகளையும் பிரதமர் மோடி மேற்கொண்டார்.
மகா கும்பமேளா: உலகில் வேறெங்கும் இல்லாத ஆன்மிக விழா - சாய்னா நேவால்
மகா கும்பமேளாவில் பங்கேற்க திரிவேணி சங்கமத்துக்கு வந்துள்ளேன். மாபெரும் திருவிழாவான மகா கும்பமேளாவில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம் என்று பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்தார்.
மேலும் இதைப் போன்ற ஆன்மிக விழா உலகில் வேறெதுவும் இல்லை. இது நம் நாட்டில் நடப்பதில் பெருமிதம் கொள்கிறேன். நம் தேசம் மேலும் மேலும் முன்னேற பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் கூறினார்.
காசாவை கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் - டிரம்ப் அதிரடி அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், “காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும். அமெரிக்க படைகளை பயன்படுத்தவும் சாத்தியம் உள்ளது. காசா பகுதியில் உள்ள ஆபத்தான வெடிகுண்டுகள், ஆயுதங்களை அகற்றுவோம். சேதம் அடைந்த கட்டிடங்களை அகற்றி வளர்ச்சி பணிகளை உருவாக்குவோம். இதற்கு நாங்கள் பொறுப்பு. பொருளாதாரத்தை மேம்படுத்தி அந்த பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வீட்டு வசதி உள்ளிட்டவற்றை செய்து கொடுப்போம். தற்போது ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் மூலமாக அப்பகுதியில் அமைதியை நிலைநாட்டுவோம்” என்று கூறினார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 19.95 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வரும் - தமிழ்நாடு அரசு
அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வரும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மேலும் ஏற்கனவே 9 மாவட்டங்களில் இத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 26.03 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நேற்று நடந்தது தேவையற்ற போராட்டம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்து அமைப்பினரே இல்லை. போராட்டம் என்ற பெயரில் பா.ஜ.க.வினர் திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.
ஒரு பொறுப்புள்ள தலைவர் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பியது அழகல்ல. திருப்பரங்குன்றம் பிரச்சனை தேவையற்ற பிரச்சனை என்று அப்பகுதி மக்களே கருத்து சொல்கிறார்கள். வட மாநிலத்தைப் போல கலவரத்தை ஏற்படுத்த பா.ஜ.க.வினர் முயற்சிக்கிறார்கள், அது தமிழகத்தில் நடக்காது. தமிழகம் திராவிட மண்... இதுபோன்ற கலவர முயற்சியை அனுமதிக்காது. திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் உறவினர்களைபோல் வாழ்ந்து வருகின்றனர்” என்று கூறினார்.
கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்வதோடு, எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி அனைவர் மீதும் சட்ட நடவடிக்கையை உறுதிசெய்யவேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
மேலும், தமிழ்நாடு முழுக்க கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
முதல்-அமைச்சர் வருகை: நெல்லையில் இன்று முதல் 3 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை
நெல்லை மாநகர பகுதியிலும் இன்று காலை 6 மணியில் இருந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்க தடைவிதித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹடிமணி உத்தரவிட்டுள்ளார்.