இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
அசாமில் நாளை முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்படுமென அறிவிப்பு
தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் தீவிர பட்டியல் சீர்திருத்தம் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அசாமில் நாளை முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்படுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அசாம் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா வரவேற்றார். மேலும், தேர்தல் பணியை வெளிப்படையாகவும், சரியான நேரத்திலும் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு அரசாங்கம் முழு ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார்.
புதுடெல்லி:
டாஸ்மாக் முறைகேடு வழக்கில், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்கள் தொடர்பான முந்தைய உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த புதிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்தது. டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியது.
இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அவரிடமே திரும்ப ஒப்படைக்கவும், அவர் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் தடை விதித்து உத்தரவிட்டது.இந்த உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி கடந்த 10ம் தேதி மனுவைத் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த இந்த மனு மீது, அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் வாதிடும்போது, ‘டாஸ்மாக் தொடர்பான வழக்கில் ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் எந்தவித மாற்றமும் செய்ய முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்து, அமலாக்கத்துறையின் புதிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி சென்னையில் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மத்திய அரசுக்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது. எழும்பூரில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் நனைந்தபடி போராட்டம் நடத்தினர்.இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக கொண்டு வருவது ஏன்? திடீரென போலி வாக்காளர்களை கண்டு பிடித்தது போல பேசுவது ஏன்? ஈரோடு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு போட்டது தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதா?ஒரே மாதத்தில் 6 கோடி வாக்காளர்களை எப்படி சரிபார்க்க முடியும். ஓராண்டு கால அவகாசம் எடுத்து எஸ்ஐஆர் பணிகளை செய்திருக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கான வாக்காளர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.எங்களை போன்ற வளர்ந்து வரும் கட்சியினர் எஸ்ஐஆர்-ஐ எப்படி எதிர்கொள்ள முடியும்?குறைந்தது ஒரு கோடி பேர் தங்களது வாக்குரிமையை இழப்பார்கள்.இவ்வாறு அவர் கூறினார்
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
வானிலை மையம் வெளியிட்ட தகவல்:
வருகின்ற 22-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும்.
17-11-2025 (இன்று): கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக்கடலில் வருகிற 22-ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்பிறகு அது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வட மேற்காக நகர்ந்து வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுமா? என்பது அடுத்தடுத்த அறிவிப்பில் தான் தெரியவரும்.
புழல் ஏரியில் 1,200 கனஅடி உபரிநீர் திறப்பு
புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு 600 கனஅடியில் இருந்து 1,200 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. கனமழை முன்னெச்சரிக்கையாக புழல் ஏரியில் உபரி நீர் அதிகளவில் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், உபரிநீர் கால்வாய் அருகே வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. திருவள்ளூர் கலெக்டர் இதற்கான உத்தரவை பிறப்பித்து உ ள்ளார்.
டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு; அமீர் அலிக்கு 10 நாள் என்.ஐ.ஏ. காவல்
உமருக்கு உதவியாக செயல்பட்ட அமீர் ரஷீத் அலி என்பவரை என்.ஐ.ஏ. அமைப்பு நேற்று கைது செய்தது. இவர் உமருடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டியவர் ஆவார். காஷ்மீரை சேர்ந்த அலியின் பெயரிலேயே கார் பதிவு செய்யப்பட்டு உள்ளது. உமரின் மற்றொரு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. டெல்லி சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் என்றும் என்.ஐ.ஏ. தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் அலி இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 10 நாள் என்.ஐ.ஏ. காவல் விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது. இந்த வழக்கில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
வங்காளதேச வன்முறை; முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பு
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த வன்முறை சம்பவத்தில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியது
கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கலங்கரை விளக்கம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, பாரதமாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம் உள்பட மற்ற சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதியது.
சீசனையொட்டி கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு மற்றும் சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. இரவு நேரத்திலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. துப்புரவு பணியாளர்கள் சுழற்சி முறையில் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள். ஆண்டுதோறும் சபரிமலை சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடைபாதைகளில் 100-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் நகராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு சீசன் கடைகளும் ஏலம்விடப்பட்டு உள்ளன.
கன்னியாகுமரியில் சீசனையொட்டி 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 450-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.