பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
தாம்பரம் அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.;
கோப்புப்படம்
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரது தாயார் வெளிமாநிலத்தில் உள்ளார். இந்த நிலையில் சிறுமியின் தாயார், தனது தோழியை தொடர்பு கொண்டு தனது குடும்பத்துக்கு பணம் தேவைப்படுகிறது. எனது மகளிடம் நகையை கொடுத்து விடுகிறேன். எனக்கு பணத்தை பெற்று கொடு என கூறியதாக தெரிகிறது.
அதன்படி மாணவி 4 கிராம் நகையை எடுத்துகொண்டு இரும்புலியூரில் உள்ள தாயாரின் தோழி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தாயாரின் தோழி இல்லாததால் அவரது கணவரான தச்சுத்தொழிலாளி சங்கர் என்பவரிடம் கொடுத்துள்ளார். அப்போது பிளஸ்-2 மாணவிக்கு சங்கர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சல் போட்டு கத்தினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியிடம் விசாரித்தனர். அழுதபடியே அங்கிருந்து சிறுமி வீட்டுக்கு புறப்பட்டார். வழியில் மாணவி மருந்து கடைக்கு சென்று மாத்திரைகளை வாங்கி தின்றதாக தெரிகிறது. இதையடுத்து தாம்பரம் அருகே சென்றுகொண்டிருந்த சிறுமி திடீரென சாலையில் மயங்கி விழுந்தார்.
வாகன ஓட்டிகள் அவரை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போலீசார் மாணவி கையில் வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி பார்த்தபோது தனது தாயாரின் தோழி கணவர் பாலியல் தொந்தரவு செய்தது குறித்து எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சங்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.