இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 2-9-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-09-02 09:30 IST


Live Updates
2025-09-02 14:28 GMT

குரூப் 4 தேர்வு சர்ச்சை; நீதி கேட்டு பிரதமர், தமிழக கவர்னருக்கு 200 தேர்வர்கள் மனு

குரூப் 4 தேர்வு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. கேள்வித்தாள்கள் முன்கூட்டியே லீக் ஆனதாகவும், தேர்வு மையங்களில் சீலிடப்படாத கேள்வித்தாள் கட்டுகள் இருந்ததாகவும் தேர்வர்கள் புகார் எழுப்பினர்.

இதுதவிர, முனைவர் கல்வி தகுதி நிலையில் கேட்க வேண்டிய கேள்விகளை, பத்தாம் வகுப்பு பாடத்திட்ட அளவில் நடைபெறும் போட்டி தேர்வில் கேட்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தமிழகத்தில் நான்கு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும், மீண்டும் மறு தேர்வு நடத்த வேண்டும், இறந்த இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், தேர்வு குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 200 தேர்வர்கள் கையெழுத்திட்டு, குடியரசு தலைவர், பிரதமர், தேசிய மகளிர் ஆணையம் மற்றும் தமிழக கவர்னர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளனர்.

2025-09-02 14:06 GMT

ஒரு வழியாக தைரியம் வந்து விட்டது; பிரதமர் மோடியின் மணிப்பூர் பயணம் பற்றி காங்கிரஸ் கிண்டல்

பிரதமர் மோடியின் பயணம் பற்றி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஒரு வழியாக செப்டம்பர் 13-ந்தேதி மணிப்பூர் செல்வதற்கு பிரதமருக்கு தைரியம் வந்து விட்டது போன்று தெரிகிறது என கிண்டலாக தெரிவித்து உள்ளார். ஆனால், இது முன்பே நடந்திருக்க வேண்டும். அதிக காலதாமதம் ஏற்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார்.

2025-09-02 13:33 GMT

சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி

சென்னை மாநகராட்சி, ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் தனியார் நிறுவனத்தின் வாயிலாக ஜூலை 16ம் தேதி முதல் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடந்த மாதம் 1ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இரண்டு வாரத்திற்கும் மேலாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு அ.தி.மு.க., காங்கிரஸ், நா.த.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

இதற்கிடையில், தூய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி தேன்மொழி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து தூய்மை பணியாளர்களை போலீசார் அங்கிருந்து வலுக்கட்டாயமாக கைது செய்து கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியேற்றினர். இந்த நிலையில், போராட்டம் நடத்த தூய்மை பணியாளர்கள் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2025-09-02 13:20 GMT

தங்கம் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்

நடிகை ரன்யா ராவ் மீது சட்டவிரோத தங்கக் கடத்தல் வழக்கில் மிகப்பெரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்ககம் நடத்திய விசாரணையில், ரன்யா ராவ் 127.3 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கொண்டு வந்தது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, ரூ.102.55 கோடி அபராதம் விதித்து, அதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

2025-09-02 13:16 GMT

திருச்செந்தூர் கோவிலில் செப்டம்பர் 4-ந்தேதி முதல் மீண்டும் தங்கத்தேர் வீதி உலா

திருச்செந்தூர் முருகன் கோவிலில் செப்டம்பர் 4-ந்தேதி (நாளை மறுநாள்) முதல் மீண்டும் தங்கத்தேர் வீதி உலா வர இருக்கிறது. இது தொடர்பாக, கோவில் இணை ஆணையர் சு.ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாள்தோறும் மாலை 6 மணியளவில் கிரிப்பிரகாரத்தில் தங்கத்தேர் உலா நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், கோவிலில் பெருந்திட்ட வளாக பணிகளின் ஒரு பகுதியாக தரைத்தள பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக கடந்த 17-7-2024 முதல் தற்காலிகமாக தங்கத்தேர் உலா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது, கிரிப்பிரகார தரைத்தள பணிகள் நிறைவு பெற்றுள்ளதையடுத்து, வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் மீண்டும் தங்கத்தேர் உலா நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-09-02 11:51 GMT

மத்திய அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி.. அகவிலைப்படி உயருகிறது

7-வது ஊதிய குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் அகவிலைப்படி நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 55 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலை ஆகிய 6 மாதங்களின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு இருக்கும்.

மத்திய அரசின் புள்ளியியல் துறை அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள நுகர்வு பொருட்களின் விலைவாசியை கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாதமும் விலைக்குறியீட்டு எண்ணை கணக்கிடுவர். அதனடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.

2025-09-02 11:38 GMT

இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை முழுமையாக கைப்பற்றியது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி முதல் டி20 போட்டி ஹராரேயில் நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கந்தர் ராசா தலைமையிலான அந்த அணியில் சீன் வில்லியம்ஸ். பிரண்டன் டெய்லர் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

2025-09-02 11:36 GMT

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய சின்னர்

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில்ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் - ரஷிய வீரர் அலெக்சாண்டர் பப்ளிக் ஆகியோயர் மோதினர் .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய சின்னர் 6-1,6-1,6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் காலிறுதிக்கு முன்னேறினார்.

2025-09-02 11:09 GMT

சென்னையில் இரு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது: வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், மேலும் வலுவடைந்து, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் ஒரிசா பகுதிகளை கடந்து செல்லக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

02-09-2025 மற்றும் 03-09-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

2025-09-02 10:14 GMT

செங்கோட்டையன் விவகாரம் குறித்து மாலையில் பிராசாரத்தின்போது பதில் அளிக்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்