இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-06-2025

Update:2025-06-21 09:15 IST
Live Updates - Page 3
2025-06-21 04:06 GMT

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து, கனமழை பெய்து வரும் சூழலில், கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் விரைவாக நிரம்பி வருகின்றன. கடந்த 18-ந்தேதி கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

மேலும் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ், உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் கரையோரங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

2025-06-21 03:53 GMT

ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ், ஈரானில் இருந்து 290 இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் நேற்றிரவு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு உள்ளனர். டெல்லியில் உள்ள சர்வதேச இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவர்களை மத்திய வெளிவிவகார அமைச்சக செயலாளர் அருண் குமார் சாட்டர்ஜி வரவேற்றார். மாணவர்கள், புனித யாத்திரை சென்றவர்கள் உள்பட பலரும் பாதுகாப்பாக வந்திறங்கினர். இதற்காக அவர்கள் மத்திய அரசுக்கு மனப்பூர்வ நன்றியை தெரிவித்து கொண்டனர்.

இதற்காக, இந்திய தூதரகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. இந்தியர்கள் பாதுகாப்பாக 5 நட்சத்திர ஓட்டல்களிலும் தங்க வைக்கப்பட்டனர். அதன்பின்னர், இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி மீட்கப்பட்டவர்களில் சிலர் கூறும்போது, விரைவாகவும், பாதுகாப்பாகவும் எங்களை சொந்த நாட்டுக்கு அழைத்து வந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றனர். ஈரானில் நிலைமை நல்ல முறையில் இல்லை என்று எங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். இந்திய தூதரகமும் மற்றும் நம்முடைய தூதரும் இந்தியர்களை வெளியேற்றும் நடைமுறையை பாதுகாப்பாகவும் மற்றும் சுமுக முறையிலும் செய்து முடித்தனர் என்று அவர்கள் கூறினர்.

2025-06-21 03:47 GMT

சர்வதேச யோகா தினத்தில் ஆந்திர பிரதேசத்தின் துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே. கடற்கரையில் பிரதமர் மோடி, ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் உள்ளிட்ட பலரும் காலை 6.30 மணி முதல் யோகாசனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

1,200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், டிரோன்கள் ஆகியவற்றை கொண்டு கண்காணிப்பு பணிகளும் நடந்து வருகின்றன. முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சிக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். காலை 6:30 மணி முதல் நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்கின்றனர். கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் இந்த பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்