இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-05-2025

Update:2025-05-26 09:16 IST
Live Updates - Page 3
2025-05-26 07:27 GMT

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,009 ஆக உயர்வடைந்து உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 45 லட்சத்து 11 ஆயிரத்து 545 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 5 லட்சத்து 33 ஆயிரத்து 673 பேர் பலியாகி உள்ளனர்.

2025-05-26 06:41 GMT

குஜராத்தில் பிரதமர் மோடி இன்றும் நாளையும் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனை முன்னிட்டு, வதோதரா நகரில் அவர் இன்று வாகன பேரணியை நடத்தினார். அதற்காக, அலங்காரங்கள், தோரணங்கள் அமைப்பு, போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இந்த வாகன பேரணியின்போது, திறந்த காரில் நின்றபடி பிரதமர் மோடி சாலை வழியே சென்றார். அப்போது, திரண்டிருந்த பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் பூக்களை தூவி அவரை வரவேற்றனர். இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை முன்னின்று நடத்திய இந்திய ராணுவ பெண் அதிகாரி கர்னல் சோபியா குரேஷியின் குடும்பத்தினர் இந்த பேரணியில் இணைந்து கொண்டனர்.

அவர்கள் பார்வையாளர்கள் வரிசையில் பொதுமக்களுடன் ஒன்றாக நின்றபடி பிரதமரை நோக்கி பூக்களை தூவினர். பதிலுக்கு பிரதமர் மோடியும் அவர்களை நோக்கி கையசைத்தபடி சென்றார்.

2025-05-26 06:05 GMT

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின்     விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.71,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.8,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2025-05-26 05:32 GMT

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-05-26 04:56 GMT

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை தென்மேற்கு பருவமழை காரணமாக அதன் முழு கொள்ளளவான நூறு அடியில் 97 அடி வரை தண்ணீர் நிரம்பியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி பில்லூர் அணையின் நான்கு மதகுகளும் திறக்கப்பட்டு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆற்றின் கரை ஓரத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விட்டுள்ளது.

2025-05-26 04:46 GMT

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு நகரங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் நேற்று இரவும், இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. மத்திய மராட்டியத்தில் நிலவிய காற்றழுத்தம் கிழக்கு-வடகிழக்கு நோக்கி மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் கடந்து சென்றது. இதனால், அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

கனமழையால் இன்று காலை குர்லா, சியான், தாதர் மற்றும் பரேல் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. வாகன போக்குவரத்தும் முடங்கியுள்ளது. மும்பையின் நாரிமன் பாயிண்ட் பகுதியில் இன்று காலை 6 முதல் 7 மணி வரையில் 40 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.

நகரின் கிழக்கு மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளில் லேசான மழைப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில், மும்பை, தானே மற்றும் பால்கர் மாவட்டங்களுக்கு இன்று நாள் முழுவதும் மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், தேவையின்றி வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என மும்பை மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது.

2025-05-26 04:18 GMT

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி ஆகிய ஏழு இடங்களில், கால்நடை மருத்துவ கல்லுாரிகள் செயல்படுகின்றன. இக்கல்லுாரிகளில், ஐந்தரை ஆண்டு, பி.வி.எஸ்.சி., ஏ.எச்., கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு 660 இடங்கள் உள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வள தொழில்நுட்ப கல்லுாரி, ஓசூரில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லுாரி உள்ளிட்டவைகளில், நான்கு ஆண்டு பி.டெக்., இளநிலை உணவு தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய படிப்புகள் உள்ளன.

இவற்றில், 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2வில் கணிதம், வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களை படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்படிப்புகளில் சேர விரும்புவோர், இன்று காலை 10:00 மணி முதல், ஜூன் 20 மாலை 5:00 மணி வரை, https://adm.tanuvas.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

2025-05-26 03:56 GMT

பிரதமர் மோடி 2 நாட்கள் குஜராத் பயணம் ரூ.82,500 கோடி திட்டங்கள் தொடக்கம்

குஜராத்துக்கு பிரதமர் மோடி இன்றும் நாளையும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனை முன்னிட்டு, வதோதரா நகரில் அவர் இன்று வாகன பேரணியை நடத்தவுள்ளார். இதனை முன்னிட்டு அதற்காக போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் துரித கதியில் நடந்து வருகின்றன.

இந்த பயணத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். நாட்டின் முதல் 9 ஆயிரம் எச்.பி. திறன் கொண்ட ரெயிலை கொடியசைத்து இன்று தொடங்கி வைக்க இருக்கிறார்.

2025-05-26 03:55 GMT

மதுரை அவனியாபுரம் துணை மின்நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே இப்பகுதிக்கு உட்பட்ட டி-மார்ட், கே போர் ஓட்டல், வெள்ளக்கல், பர்மா காலனி, கணேசபுரம், பெருங்குடி அன்பழகன் நகர், மண்டேலா நகர், பி.டி.சி. காவலர் குடியிருப்பு, சின்ன உடைப்பு, குரங்கு தோப்பு, ஆண்டவர் நகர், விமான நிலையம் ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

2025-05-26 03:48 GMT

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்