த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை 1½ கோடியாக உயர்ந்தது
புதிய உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு கட்சியின் டிஜிட்டல் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு நடந்தது. இந்த மாநாட்டிற்கு பிறகு கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக பிரத்யேக தனி செயலி உருவாக்கப்பட்டது. இந்த செயலி மூலம் உறுப்பினர்கள் சேர்க்கை முன்னெடுக்கப்பட்டது.
வீடு, வீடாக சென்றும் த.வெ.க. நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர். ஒரு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்குடன் பயணித்த த.வெ.க. தற்போது 1½ கோடி உறுப்பினர்கள் என்ற புதிய இலக்கை அடைந்துள்ளது. புதிய உறுப்பினர்களில் 70 சதவீதம் பேர் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆவார்கள். புதிய உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு கட்சியின் டிஜிட்டல் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
விரைவில் புதிய உறுப்பினர்களை அந்தந்த பகுதியை சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து கட்சி பணியை தீவிரப்படுத்துவது, மக்கள் பிரச்சினையை முன் நிறுத்தி போராட்டம் நடத்துவது குறித்து பயிற்சி பட்டறை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதற்கிடையே 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் விருது, பரிசுகள் வழங்கி வருகிறார். இதன் நிறைவு கட்ட பரிசளிப்பு விழா மாமல்லபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க உள்ளது. இதில் விஜய் பங்கேற்று பேச உள்ளார்.