கடலூர் தனியார் தொழிற்சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு - முதல்-அமைச்சர் நிதிஉதவி அறிவிப்பு
விபத்தில் உயிரிழந்த 2 பெண்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
கடலூர் மாவட்டம், குடிகாடு கிராமத்திலுள்ள தனியார் தொழிற்சாலையில் மதில்சுவர் சாய்ந்த சம்பவத்தில் உயிரிழந்த இருவர் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதிஉதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“கடலூர் மாவட்டம் மற்றும் வட்டம், குடிகாடு கிராமத்தில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் இன்று (23.8.2025) மாலை 6 மணியளவில் மதில்சுவர் சாய்ந்ததில் சம்பவ இடத்தில் பணிபுரிந்துவந்த பூதங்கட்டி கம்பளிமேடு பகுதியைச் சேர்ந்த இளமதி (வயது 35) க/பெ.அன்பு மற்றும் இந்திரா (வயது 32) க/பெ. தேவர் ஆகிய இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.