அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டதை தட்டிக்கேட்ட இருவருக்கு அரிவாள் வெட்டு; கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயல்
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்;
காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதிர்பூர் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் டில்லிபாபு, சங்கர். இவர்களது வீட்டின் அருகே உள்ள வீட்டில் சில இளைஞர்கள் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், பாட்டு சத்தத்தை குறைக்கும்படி இன்று டில்லிபாபுவும் அவரது சகோதரன் சங்கரும் இளைஞர்களிடம் முறையீட்டுள்ளனர். அப்போது கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் ஆத்திரத்தில் டில்லிபாபு, சங்கரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் சகோதர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சகோதரர்களை கஞ்சா போதையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.