மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவானது வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
மேட்டூர்,
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த சில மாதங்களாக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது. கடந்த சில வாரங்களாக டெல்டா பாசன பகுதிகளில் பெய்த மழை நின்றதால், பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு கடந்த 7-ந் தேதி முதல் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவானது வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் நேற்று காலை முதல் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவானது வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 459 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் குறைய வாய்ப்புள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 116.22 அடியாக இருந்தது.