மகன்களுடன் செல்போனில் எடுத்துக்கொண்ட கடைசி ‘செல்பி’.. பெண் எடுத்த விபரீத முடிவால் அதிர்ச்சி

மூத்த மகனை ஏரிக்கரையில் நிற்க வைத்து விட்டு, தனது இளைய மகனை துப்பட்டாவால் தனது இடுப்பில் இறுக்கி கட்டிக்கொண்டு அவர் ஏரியில் குதித்தார்.;

Update:2025-12-11 07:58 IST

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே புங்கங்குழி- ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (வயது 35), கொத்தனார். இவர் திருப்பூரில் பணியாற்றியபோது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாண்டி லெட்சுமியை (33) காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு லோகேஷ் (7), கவிலேஷ் (3) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ரகுபதி தனது மனைவி பாண்டி லெட்சுமியுடன் அடிக்கடி திருப்பூருக்கு சென்று கட்டிட வேலை பார்ப்பது வழக்கம்.

கடந்த சில மாதங்களாக ரகுபதி திருப்பூருக்கு செல்லவில்லை. ஆனால் பாண்டி லெட்சுமி தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு தனது 2 மகன்களையும் அழைத்துக்கொண்டு திருப்பூருக்கு சென்று வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை திருப்பூரில் இருந்து அரியலூர் மாவட்டத்துக்கு தனது 2 மகன்களுடன் பஸ்சில் புறப்பட்ட பாண்டி லெட்சுமி விக்கிரமங்கலம் அருகே உள்ள அம்பலவர் கட்டளை கிராமத்திற்கு வந்தார். பின்னர் பஸ் நிலையம் அருகே உள்ள கீழக்கொட்டேரியில் தனது மகன்களுடன் செல்போனில் ‘செல்பி’ எடுத்துக்கொண்டார். அதன்பின்னர் தனது மூத்த மகன் லோகேஷை ஏரிக்கரையில் நிற்க வைத்து விட்டு பாண்டி லெட்சுமி தனது இளைய மகன் கவிலேஷை துப்பட்டாவால் தனது இடுப்பில் இறுக்கி கட்டிக்கொண்டு ஏரியில் குதித்தார். இதனைக்கண்ட லோகேஷ் கதறி அழுதான்.

அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலர், சிறுவன் அழுவதை கண்டு அவனிடம் விசாரித்தனர். அப்போது அவன் தனது தாய், தம்பியுடன் ஏரியில் குதித்ததாக தெரிவித்துள்ளான்.

இதையடுத்து அவர்கள் ஏரியில் குதித்து பாண்டி லெட்சுமியையும், கவிலேஷையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பாண்டி லெட்சுமி, கமலேஷ் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டி லெட்சுமி தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்