அ.தி.மு.க. ஆட்சியில் காதல் ஜோடிகள் பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் - ராஜேந்திரபாலாஜி
தி.மு.க. அரசு மகளிருக்கு மட்டும் இலவச பஸ் பயணத்தை அறிவித்து, ஒன்றாக இருந்த குடும்பங்களைப் பிரித்துவிட்டதாக ராஜேந்திர பாலாஜி கூறினார்.;
கோப்புப்படம்
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பாவடி தோப்பு பகுதியில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-
எம்.ஜி.ஆர். ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்று சிலர் பேசுகிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆ.ர் ஆட்சியை உருவாக்கவும், மீண்டும் கொண்டு வரவும் முடியும் என்றால் அது அவரது உண்மையான தொண்டர்களால் மட்டும்தான் முடியும். அ.தி.மு.க. தொண்டர்கள் ஒருபோதும் சிதற மாட்டார்கள்.
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தி அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். மக்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள். மே 5ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்கப்போகிறார். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வேண்டும் என்பதே மக்கள் தீர்ப்பு.
அதிமுக அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சி பொறுப்பேற்ற உடன் முதலில் கையெழுத்திடப்படும் திட்டமே, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் 2,000 ரூபாய் செலுத்தும் திட்டம்தான். கருப்பு அட்டை, சிவப்பு அட்டை, சீனி அட்டை என எந்த பாகுபாடும் இல்லை.
ரேஷன் அட்டை இருந்தால் அனைவருக்கும் இந்த தொகை கிடைக்கும். தி.மு.க. அறிவித்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் முறையாக வழங்கப்படவில்லை. அந்தத் திட்டம் முழுக்க முழுக்க ஏமாற்று வேலை. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த கட்சி தி.மு.க. அறிவித்த பல திட்டங்களையும் செயல்படுத்தாமல் பட்டை நாமம் போட்டது போல் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறது.
அ.தி.மு.க. டெல்லியில் வைத்துள்ள கூட்டணியின் காரணமாக, அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்த முடியும். மத்திய அரசிடம் சண்டை போடாமல், பேசிக் கேட்டுப் பெற தெரிந்த ஆட்சி தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். டெல்லியில் மோடி ஆட்சி, தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி - இதுதான் தமிழகத்திற்கு நல்ல தருணம்.
தி.மு.க. அரசு மகளிருக்கு மட்டும் இலவச பஸ் பயணத்தை அறிவித்து, ஒன்றாக இருந்த குடும்பங்களைப் பிரித்துவிட்டது. கணவன் தனியாக, மனைவி தனியாகப் பயணிக்க வேண்டிய நிலையை உருவாக்கியது. அந்தப் பிரிந்த குடும்பங்களை மீண்டும் ஒன்றாகச் சேர்க்கும் வகையில், ஆண்களுக்கும் இலவச பஸ் பயணத் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இனிமேல் ஆண்கள் தங்கள் மனைவியோடும், காதலியோடும் அரசு பஸ்களில் இலவசமாக பயணித்து சினிமாவுக்கு செல்லலாம், ஊர் சுற்றலாம்.
திருத்தங்கல் ரெயில்வே மேம்பாலத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். தற்போது அதே மேம்பால கட்டுமான பணிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி உள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். வருகிற 23-ந்தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் இருப்பார்கள்.
கூட்டணி குறித்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிந்துவிட்டன. எல்லோரும் அ.தி.மு.க. கூட்டணிக்குள் வந்து சேர்வார்கள். அ.தி.மு.க.வின் ஒரு வாக்கு கூட பிரியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் துப்பாக்கிபோல் ஒரே அணியில் நிற்போம். தி.மு.க.வை ஆட்சியிலிருந்து அகற்றி, எடப்பாடி பழனிச்சாமியை முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர வைக்கும் வரை அ.தி.மு.க. ஓயாது.
இவ்வாறு அவர் கூறினார்.