தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறுமா தே.மு.தி.க., அ.ம.மு.க...? - இன்று பேச்சுவார்த்தை
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் தே.மு .தி.க., அ.ம.மு.க. கட்சிகளை இணைக்கும் வகையில் அந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.;
சென்னை,
தமிழக சட்டசபைக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆளுங்கட்சியான தி.மு.க. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கவும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன. ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதி மய்யம் என பல கட்சிகள் வரிசை கட்டி நிற்கின்றன.
இதுபோக, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது. புதிய வரவான நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், கூட்டணிக்கு பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தாலும் முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய்தான் என்று கூறிவருகிறது.
இந்த சூழலில், அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் 23-ந்தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேச இருக்கிறார்கள். எனவே கூட்டணியை இறுதிப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
தற்போது வரை அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. (அன்புமணி), த.மா.கா., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் தே.மு.தி.க., அ.ம.மு.க.வை சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) தே.மு.தி.க. வுடன், பா.ஜனதா மேலிட பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஸ்கோயல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் டி.டி.வி.தினகரன் உடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. ஒருவேளை 2 கட்சிகளுடனும் கூட்டணி உறுதி செய்யப்பட்டால் அந்த கட்சிகளின் தலைவர்கள் 23-ந்தேதி நடக்கும் பிரசார பொதுக்கூட்ட மேடையில் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
கூட்டணி உறுதி செய்யப்பட்டவுடனே, எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு இடங்கள் என்பது குறித்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று தெரிகிறது. பியூஸ்கோயல் முன்னிலையில் அ.தி. மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.