அமெரிக்கா 50 சதவீத வரி: ரூ.1,000 கோடி அளவுக்கு முந்திரி பருப்பு ஏற்றுமதி பாதிப்பு

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து முந்திரி பருப்புகள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பது அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.;

Update:2025-09-01 10:27 IST

தூத்துக்குடி,

இந்திய முந்திரி ஏற்றுமதி சந்தையில் மிக முக்கியமான பங்கை வகிக்கும் ஊர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி. இந்தியா முழுவதும் பயிரிடப்பட்டாலும் பண்ருட்டி முந்திரிக்கென்று தனிச்சுவை உண்டு.இதற்காக பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் பகுதிகளில் 28 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவில் முந்திரிக்காடுகள் பயிரிடப்பட்டிருக்கின்றன. அதில் இருந்து ஆண்டுதோறும் 22 ஆயிரத்து 168 டன் முந்திரி பருப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முந்திரி பருப்புகள் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பா, ரஷியா, சவுதிஅரேபியா, துபாய், ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன்மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தருகிறது முந்திரிப்பருப்பு. தமிழகத்தில் முந்திரி தொழிலில் 2 லட்சம் பெண் தொழிலாளர்கள் நேரடியாகவும், ஒரு லட்சம் பெண் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும் என டிரம்ப் அறிவுறுத்தி வந்தார். ஆனால் இந்தியா அதற்கு அடிபணியவில்லை. இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் இந்தியப்பொருட்களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது.

இதன் எதிரொலியாக, கடந்த சில நாட்களாக தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து முந்திரி பருப்புகள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பது அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முந்திரி ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் சங்கப்பொருளாளர் செல்வமணி கூறுகையில், "அமெரிக்கா வரிவிதிப்பால் இதுவரை ரூ.1,000 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக அமெரிக்காவுடன் பேசி 50 சதவீதம் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்." என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்