வேன்களை மினி பஸ்களாக இயக்கலாம்: தமிழக அரசு அனுமதி

12 முதல் 16 இருக்கைகள் கொண்ட வேன்களை (மேக்ஸி கேப்) பொது போக்குவரத்துக்காக பயன்படுத்தி கொள்ள அரசு அனுமதித்துள்ளது.;

Update:2025-09-13 00:10 IST

சென்னை,

தமிழகத்தில் 100 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் பகுதிகளுக்கு பஸ் சேவை கிடைக்கும் வகையில் புதிய விரிவான மினி பஸ் திட்டம் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இந்த விரிவான மினிபஸ் திட்டத்தில் போதுமான அளவிற்கு மினி பஸ்களை யாரும் இயக்க முன்வரவில்லை என்று தெரிகிறது.

இதனால், குக்கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களில் உள்ள மக்களுக்கும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் புதிய நடவடிக்கை ஒன்றை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, 12 முதல் 16 இருக்கைகள் கொண்ட வேன்களை (மேக்ஸி கேப்) பொது போக்குவரத்துக்காக பயன்படுத்தி கொள்ள அரசு அனுமதித்துள்ளது. இதற்காக பொதுப் போக்குவரத்து வாகனங்களின் குறைந்தபட்ச உயரம் 185 சென்டி மீட்டர் என்பதை திருத்தி, 150 முதல் 200 சென்டி மீட்டராக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கும் பஸ்கள் 200 சென்டி மீட்டர் உயரமும், அமர்ந்து கொண்டு மட்டுமே பயணிக்கும் வாகனங்கள் 150 முதல் 200 சென்டி மீட்டர் உயரமும் இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், வேன்களில் பயணிகள் நின்று செல்ல அனுமதி இல்லை. இவ்வாறான திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் மலை கிராம மக்கள் உள்ளிட்ட ஊரகப் பகுதி மக்களுக்கு பேருந்து சேவை கிடைக்கும் என்பதால், இது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்