பட்டா பெயர் மாற்ற ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
கூடங்குளத்தில் வீட்டுமனை பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.;
வள்ளியூர் (வடக்கு),
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மனைவி விஜயா. பாஸ்கரின் தந்தை அய்யங்கண்ணு பெயரில் 1½ சென்ட் வீட்டுமனை நிலம் இருந்தது. இந்த நிலத்தை பாஸ்கர் பெயரில் பட்டா மாற்றம் செய்வதற்காக விஜயா கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ந்தேதி கூடங்குளத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளித்திருந்தார்.
இந்த மனு குறித்து கூடங்குளம் கிராம நிர்வாக அலுவலர் ஸ்டால்வின் ஜெயசீலன் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து வீட்டுமனை நிலத்துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விஜயாவிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டார். எனினும், லஞ்சம் கொடுக்க விரும்பாத விஜயா இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். அதன்படி ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரத்தை விஜயாவிடம் கொடுத்து அனுப்பினர்.
அந்த பணத்தை பெற்றுக்கொண்ட விஜயா நேற்று மதியம் கூடங்குளம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று, கிராம நிர்வாக அலுவலர் ஸ்டால்வின் ஜெயசீலனிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் கையும் களவுமாக கிராம நிர்வாக அலுவலர் ஸ்டால்வின் ஜெயசீலனை பிடித்து கைது செய்தனர்.
கூடங்குளத்தில் வீட்டுமனை பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கைதான ஸ்டால்வின் ஜெயசீலனின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதி ஆகும்.