தோரணமலையில் கடைசி வெள்ளியை முன்னிட்டு வேல்பூஜை: பெண்கள் தீபங்கள் ஏற்றி வழிபாடு
பெண்களே உற்சவர்களுக்கு மலர் தூவி வணங்கினார்கள்.;
தென்காசி,
தோரணமலையில் கடைசி வெள்ளியை முன்னிட்டு வேல்பூஜை நடந்தது. இதில் பெண்கள் தீபங்கள் ஏற்றி மலர்தூவி வழிபாடு நடத்தினார்கள்.தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோவிலில் தமிழ்மாத கடைசி வெள்ளி அன்று சிறப்பு பூஜை நடைபெறும். அதேபோல் புரட்டாசி கடைசி வெள்ளியான இன்று(17.10.2025) தீபாவளியை நினைவூட்டும் வகையில் சிறப்பு வழிபாடு நடந்தது.
அதிகாலையில் பக்தர்கள் 21 பேர் மலை ஏறி தீர்த்த குடங்களில் சுனைநீர் கொண்டு வந்தனர். அதன்மூலம் உற்சவர்கள் முருகன்-வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. வழக்கம் போல் விவசாயம் செழிக்க வருணகலச பூஜை நடந்தது.
இந்த பூஜையில் தீபாவளியை கொண்டாடும் வகையில் 12 குத்துவிளக்குகள் ஏற்றி 30 வேல்கள் வரிசையாக வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. இந்த விளக்குகளை பெண்களே ஏற்றினார்கள்.
மேலும் சிவன், கிருஷ்ணர், லட்சுமி, சரஸ்வதி சிலைகள் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அங்கே பெண்கள் அகல்விளக்கு ஏற்றினார்கள். சுமார் 100 விளக்குகள் ஏற்றப்பட்டன. பின்னர் பெண்களே உற்சவர்களுக்கு மலர் தூவி வணங்கினார்கள்.
இன்று காலை முதல் தோரணமலையில் மழை பெய்ததது. அந்த மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் காலையிலும் மதியமும் அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.