வேலூர்: ஓடும் ரெயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு

ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-06-07 08:03 IST

வேலூர்,

கோயம்புத்தூர் அருகே ரத்தினபுரி ராமசாமி கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி மல்லிகா (வயது 41). இவர் மற்றும் இவரது நண்பர்கள் 10 பேர் கடந்த 3-ந் தேதி கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு 5-ந் தேதி ஊருக்கு திரும்பினர்.

அன்று இரவு திருப்பதி ரெயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தனர். மல்லிகா ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணித்ததாக கூறப்படுகிறது.

ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்தில் நின்று புறப்பட்ட சில நிமிடங்களில் ஜன்னல் ஓரமாக தூங்கிக்கொண்டிருந்த மல்லிகா கழுத்தில் அணிந்திருந்த 7¼ பவுன் தாலி செயின் மற்றும் தலைக்கு அடியில் வைத்திருந்த பையை மர்ம ஆசாமி பறித்து சென்றான். இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லிகா கூச்சல் போட்டார். ஆனால் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டான்.

இதுகுறித்து நேற்று ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் மல்லிகா புகார் கொடுத்தார். அதன்பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்ம ஆசாமி குறித்து காட்பாடி ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்