இளைஞர்கள் கஞ்சா போதையில் காவலரை தாக்கியதாக பரவும் வீடியோ - காவல்துறை விளக்கம்
சம்பந்தப்பட்ட வீடியோவில் இருக்கும் இளைஞர்கள் போதையில் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.;
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் காணை அரசு பள்ளி அருகே சில இளைஞர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், காவலர் ராஜேந்திரன் சீருடை அணியாமல் சாதாரண உடையில் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்கிருந்த சில இளைஞர்களுக்கும், காவலர் ராஜேந்திரனுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்த நிலையில், அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இந்நிலையில், இளைஞர்கள் கஞ்சா போதையில் காவலரை தாக்கியதாக பரவி வரும் வீடியோ குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. சம்பந்தப்பட்ட வீடியோவில் இருக்கும் இளைஞர்கள் போதையில் இல்லை எனவும், காவலர் சீருடையில் இல்லாததால் ராஜேந்திரனை அவர்கள் தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த இளைஞர்களை மன்னித்து அனுப்பியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.