‘ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்’ -அமைச்சர் கோவி.செழியன்

புதுச்சேரியில் நடந்த கூட்டத்தில் தி.மு.க.வை விமர்சித்த விஜய் குறித்து நிருபர்கள் கோவி.செழியனிடம் கேள்வி எழுப்பினர்.;

Update:2025-12-10 21:14 IST

தஞ்சாவூர்,

விவசாயிகளின் கடின உழைப்பில் உற்பத்தியாகி கொள்முதல் செய்யப்படும் ஒரு நெல்மணிக்கூட வீணாகக்கூடாது என்ற அடிப்படையில் மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் தமிழகம் முழுவதும் நிறுவப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ரூ.332.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே நடுவூரில் மட்டும் ரூ.70.22 செலவில் ஒரு லட்சம் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கோவி.செழியனிடம், நேற்று புதுச்சேரியில் நடந்த கூட்டத்தில் தி.மு.க.வை விமர்சித்த விஜய் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளித்ததாவது:-

தமிழக மக்களையே வென்றெடுக்க முடியாத நடிகர் விஜய் புதுச்சேரி மக்களை வென்றெடுப்பேன் என்பது கூரையேறி கோழி பிடிக்காதவர், வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்டுவேன் என்பது போல.

விஜய் தேர்தலில் நிற்கட்டும், முதலில் சில இடங்களில் வெற்றி பெறட்டும், அதன் பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்கட்டும். அதன் பிறகு புதுச்சேரி போகட்டும். ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் நடிகர் விஜய்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்