மணல் கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் - அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

மணல் கொள்ளையை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.;

Update:2025-12-10 22:11 IST

சென்னை,

மணல் கொள்ளை தொடர்பான வழக்கில் கனிமவள ஆணையரை நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது கனிமவள ஆணையர் மோகன் நேரில் ஆஜரானார். அவரிடம், தமிழ்நாட்டில் மணல் கொள்ளையை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த கனிமவள ஆணையர், மணல் கொள்ளையில் ஈடுபடுவோருக்கு எதிராக அபராதம் விதிக்கப்படுவதாகவும், ஆன்லைன் பதிவு முறை, ஜி.பி.எஸ். கண்காணிப்பு உள்ளிட்டவற்றின் காரணத்தால் மணல் கொள்ளை பெருமளவு தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், அபராதம் விதிப்பது மட்டும் போதாது, மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கனிமவளம் என்பது நாட்டின் சொத்து, அவற்றை கொள்ளையடிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தனர். மேலும் மணல் கொள்ளையர்களுடன் இணைந்து செயல்படும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மணல் கொள்ளையை தடுப்பதற்கு குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் கூட அது போதுமானதாக இல்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மணல் கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கனிமவள ஆணையருக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.  

Full View
Tags:    

மேலும் செய்திகள்