காட்டுமன்னார்கோவில் அருகே சிவலோக நாதர் கோவில் கும்பாபிஷேகம்: காஞ்சி சங்கராச்சாரியார் பங்கேற்பு

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மூலவர் சௌந்தரநாயகி, சிவலோகநாதர் ஆகியோருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.;

Update:2025-12-10 21:19 IST

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ம.ஆதனூர் கிராமத்தில் திருநாளைப்போவார் என அழைக்கப்பட்ட நந்தனார் சௌந்தரநாயகி அம்பிகா சமேத சிவலோகநாதர் கோவில் உள்ளது.

இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டு அதற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து கடந்த 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேக விழா தொடங்கியது. யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, மகா பூர்ணாஹுதி, யாத்ரா தானம் நடைபெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது.

யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்தபடி மதுரை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவிலை வலம் வந்து விமான கலசத்தை அடைந்தனர். பின்னர் பகல் 11.05 மணிக்கு காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பிகா சமேத ஸ்ரீ சிவலோகநாதர், ஸ்ரீ திருநாளைப்போவார் (ஸ்ரீநந்தனார்) ஆலய விமான கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

11.30 மணிக்கு கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ சௌந்தரநாயகி ஸ்ரீ சிவலோகநாதர் ஆகியோருக்கு மகா அபிஷேகம் நடந்தேறியது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் ஆதனுார் மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்