தமிழகத்தில் உள்ள வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை 75,035 ஆக அதிகரிப்பு
வாக்கு சாவடிகள் இடமாற்றம், பெயர் மாற்றம், இணைத்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.;
சென்னை,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, கட்சிகள் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில், ஆளும் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிட உள்ளன.
இதேபோன்று, நாம் தமிழர், த.வெ.க. ஆகிய இரு கட்சிகள் தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனால், இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு, தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக கடந்த நவம்பர் மாதம் 4-ந்தேதி தொடங்கிய எஸ்.ஐ.ஆர். பணிகள் டிசம்பர் 4-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் அது 11-ந்தேதி (நாளை) வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழலில், வாக்கு சாவடிகள் மறுசீரமைப்புக்கு பிறகு வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். தமிழகத்தில் 68,467 வாக்கு சாவடிகள் இருந்த நிலையில், வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை 75,035 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
1,200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட பகுதியில் புதிதாக வாக்கு சாவடிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதன்படி, 6,568 வாக்கு சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளன. 2,509 வாக்கு சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளன. வாக்கு சாவடிகள் இடமாற்றம், பெயர் மாற்றம், இணைத்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.