விஜய் வரவால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிடாது: திருமாவளவன் பேட்டி
தி.மு.க. எதிர்ப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என விஜய் கருதுகிறார் என்று திருமாவளவன் கூறினார்.;
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. எதிர்ப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என விஜய் கருதுகிறார். தி.மு.க. அரசு மீதான அவரது விமர்சனங்களுக்கு உரிய நேரத்தில் தி.மு.க. பதில் தெரிவிக்கும். விஜய் வரவால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிடும் என்ற மாய தோற்றத்தை சிலர் உருவாக்குகின்றனர்.
ஆனால் தி.மு.க. தனித்து ஆட்சியை நடத்தவில்லை. கூட்டணி பலத்துடன் ஆட்சியில் இருக்கிறது. அந்த கூட்டணி இன்னும் வலுவாக கட்டுப்பாடுடன் இயங்கி வருகிறது. வரும் தேர்தலை சந்திக்க உள்ளது. மதசார்பற்ற கூட்டணியை வீழ்த்தி ஆட்சி மாற்றம் ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு விஜயால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.