நில பிரச்சினையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணவர் கொலை: தொழிலாளி கைது

சாத்தான்குளம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் திருப்பணி புத்தன்தருவை பகுதியில் புதிதாக வாங்கிய நிலத்தை பார்வையிட சென்றார்.;

Update:2025-12-07 10:48 IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவை வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் மெட்டில்டா. இவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ஜேம்ஸ் சித்தர் செல்வன் (வயது 54). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தட்டார்மடத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கியுள்ளனர்.

ஜேம்ஸ் சித்தர் செல்வன் கடந்த 3-ம் தேதி மாலையில் சாத்தான்குளம் அருகே உள்ள திருப்பணி புத்தன்தருவை பகுதியில் புதிதாக வாங்கிய நிலத்தை பார்வையிட சென்றார். அப்போது அவரது இடத்துக்கு அருகேயுள்ள நிலத்தின் உரிமையாளரான அதே பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் மகன் ஜேக்கப் என்ற தொழிலாளி வந்தார். இருவரின் இடமும் அருகருகே இருந்ததால் ஏற்கனவே அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் மீண்டும் இதுகுறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த ஜேக்கப், மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜேம்ஸ் சித்தர் செல்வனை சரமாரி வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேக்கப்பை தேடி வந்தனர். அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் ஜேக்கப் புத்தன் தருவை காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கடந்த 4ம் தேதி இரவில் அங்கு சென்ற போலீசார், காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த ஜேக்கப்பை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திவிட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்