இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 07-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
சரி பார்த்துவிடுங்கள் இப்போதே.. SIR படிவம் கொடுத்தவர்கள் இந்த Website மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்டு பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது. electoralsearch.eci.gov.இந்த திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என இப்போதே சரிபார்த்து கொள்ளுங்கள்
தமிழகத்தில் இரவு 7 மணி வரை அரியலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 10.11 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது அம்மாநில அரசு. 99 ஆண்டுகளுக்கு வெறும் ரூ. 1 என்ற குத்தகை வாடகையுடன் இந்த நிலத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவை ‘நேரடி அச்சுறுத்தல்' நாடாக கருதும் கொள்கையை நீக்கி, புதிய தேசிய பாதுகாப்புக் கொள்கையை வெளியிட்டுள்ளது அமெரிக்க அரசு. 2014ம் ஆண்டு உக்ரைன் நாட்டின் கிரிமியா பகுதியை ரஷியா ஆக்கிரமித்தபோது மாற்றப்பட்ட கொள்கையை தற்போது புதுப்பித்து, ஒத்துழைப்பு முக்கியம் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளது அமெரிக்கா.
திருவாரூர்: மன்னார்குடி அருகே தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
2வது இன்னிங்ஸ் இங்கிலாந்து 241 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 65 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்கள் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 போட்டி கொண்ட தொடரில் 2-0 என ஆஸி., முன்னிலையில் உள்ளது.
உலகின் மிக நீளமான பயணிகள் விமானப் பயணத்தை அறிமுகம் செய்துள்ளது சீனாவின் China Eastern Airlines நிறுவனம். ஷாங்காய் முதல் அர்ஜென்டினாவின் புவெனஸ் ஐரிஸ் நகரம் வரை மொத்தம் 29 மணி நேரம் நீடிக்கும் 19,681 கி.மீ. தூரம் இந்த விமானம் பறக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ விமான சேவைகள் டிச.10ம் தேதிக்குள் வழக்கம்போல இயங்கும் வகையில் சரிசெய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சேவைகள் முழுமையாக சரியாக 2026 பிப்.10 வரை ஆகும் என முன்னர் தெரிவித்திருந்த நிலையில், விரைவில் | சரியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (டிச.07) மட்டும் சுமார் 650 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு, பவளத்தாம்பாளையத்தில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்ட இடத்தில் ஈரோடு எஸ்பி நேரில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், மாற்று இடம் தேடும் தவெக நிர்வாகிகள்.
30 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி கேட்ட நிலையில், பவளத்தாம்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடத்த போதிய இடம் இல்லாததால் மாற்று இடத்தை தேர்வு செய்ய முடிவு என கூறப்படுகிறது.
பெருந்துறை அருகே உள்ள இடத்தை ஆய்வு செய்த செங்கோட்டையன் மற்றும் தவெக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ராமதாஸ் தரப்புக்கு வெற்றி கிடைக்காது- வழக்கறிஞர் கே பாலு
அன்புமணி ராமதாஸ்தான் பாமக தலைவர் என அளித்த கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் திரும்ப பெறவே இல்லை. எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் தரப்பால் வெல்ல முடியாது.- அன்புமணி ஆதரவாளர் கே பாலு பேட்டி