‘விஜய்யின் பேச்சு பண்பாடற்றது’ - கி.வீரமணி விமர்சனம்

புதிதாக அரசியலுக்கு வந்தவர் மக்களிடம் சென்று தனது கொள்கைகளை கூறியிருக்க வேண்டும் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-23 17:40 IST

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் பேசிய கருத்துகள் குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

“எம்.ஜி.ஆரை இவர்கள் படுத்தும் பாட்டை பார்த்தால் நமக்கே பரிதாபமாக இருக்கிறது. ஒருவர் கருப்பு எம்.ஜி.ஆர். என்கிறார், மற்றொருவர் வெள்ளை எம்.ஜி.ஆர். என்கிறார். இவர்களிடம் இருக்கும் சொந்தமான சரக்கு என்ன? கொள்கை என்ன?

புதிதாக அரசியலுக்கு வந்தவர் மக்களிடம் சென்று என்னுடைய கொள்கை இது, என்னை ஆட்சிக்கு அனுப்பினால் உங்களுக்கு பயன்படும் வகையில் திட்டங்களை செயல்படுத்துவேன் என்று கூறியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக அவர் பேசியிருப்பது பண்பாடற்ற பேச்சாக உள்ளது.

ஒரு முதல்-அமைச்சரை எப்படி அழைக்க வேண்டும் என்று கூட தெரியாத அளவிற்கு, சினிமா வசனம் பேசியே பழக்கப்பட்டவர் இதையும் ஒரு திரைவசனத்தைப் போல் பேசுகிறார். சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று வந்தவர்கள் யார்? ஓய்வு பெறாமல் வந்தவர்கள் யார்? விருப்ப ஓய்வு பெற்று வந்தவர்கள் யார்? என அவர் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பது போல் தெரிகிறது.”

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்