‘எஸ்.ஐ.ஆர். மூலம் வாக்காளர் பட்டியல் சுத்திகரிக்கப்படுகிறது’ - அமித்ஷா

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எஸ்.ஐ.ஆர். பணியை முழுமையாக ஆதரிக்க வேண்டும் என அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.;

Update:2025-11-21 15:10 IST

காந்திநகர்,

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நடைபெற்ற 61-வது எல்லை பாதுகாப்புப் படை எழுச்சி தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

“நாட்டின் அனைத்து எல்லைகளிலும் ஊடுருவலைத் தடுக்கும் பணியில் எல்லை பாதுகாப்புப் படை (BSF) ஈடுபட்டுள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு மட்டுமின்றி, நாட்டின் ஜனநாயக அமைப்பை பாதுகாப்பதற்கும் ஊடுருவலை தடுப்பது அவசியமாகும். இருப்பினும், சில அரசியல் கட்சிகள் அரசாங்கத்தின் ஊடுருவல் எதிர்ப்பு நடவடிக்கைகளை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றன.

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் மேற்கு வங்க மாநிலத்தில், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் லட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் எஸ்.ஐ.ஆர். பணி மூலம் வாக்காளர் பட்டியல் சுத்திகரிக்கப்படுகிறது. இந்த நாட்டிற்குள் ஊடுருவி வந்த அனைவரையும் நாங்கள் வெளியேற்றுவோம். இதுவே எங்கள் உறுதிமொழி. நமது நாட்டில் யார் முதல்-அமைச்சராக இருக்க வேண்டும், அல்லது யார் பிரதமராக இருக்க வேண்டும் என்பதை எல்லாம் இந்திய குடிமக்கள் மட்டுமே முடிவு செய்ய வேண்டும்.

ஊடுருவல்காரர்களுக்கு நமது ஜனநாயக அமைப்பை மாசுபடுத்தவும், நமது ஜனநாயக முடிவுகளில் செல்வாக்கு செலுத்தவும் உரிமை இல்லை. இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் தூய்மைப்படுத்துவதற்கும் எஸ்.ஐ.ஆர். நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு குடிமகனும் அதை முழுமையாக ஆதரிக்க வேண்டும்.

ஊடுருவல்காரர்களை பாதுகாக்க நினைக்கும் அரசியல் கட்சிகளை நான் எச்சரிக்க விரும்புகிறேன். பீகார் தேர்தலில் நாட்டு மக்கள் அளித்த உத்தரவானது, நம் நாட்டில் இருக்கும் ஊடுருவல்காரர்களுக்கு எதிரானது. வாக்காளர் பட்டியலில் ஊடுருவல்காரர்களின் பெயர்களை பாதுகாக்க பாடுபடும் கட்சிகள், நாட்டு மக்கள் அத்தகைய நோக்கங்களை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்