மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைவு
நீர் வரத்து, இன்று காலை நிலவரப்படி 30,850 கன அடியாக குறைந்துள்ளது.;
சேலம்,
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இந்தாண்டில் 5-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்டது. அதிகபட்சமாக சுமார் 90 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்பட்டதால் காவிரிஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை முதல் வினாடிக்கு 56 ஆயிரத்து 997 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து அணையில் இருந்து நேற்று காலை 10 மணி முதல் 16 கண் மதகு வழியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 750 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, இன்று காலை நிலவரப்படி 30,850 கன அடியாக குறைந்துள்ளது. டெல்டா பாசனத்திற்கு அணையில் இருந்து 30,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.470 டி.எம்.சி.ஆகவும் உள்ளது.