செங்கோட்டையன் முடிவால் யாருக்கு பின்னடைவு? - டிடிவி தினகரன் பரபரப்பு பதில்
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று டிடிவி தினகரன் கூறினார்.;
திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறந்த நிர்வாகி ஆவார். ஜெயலலிதாவுக்கு மிகவும் விசுவாசமாக இருந்தார். எனக்கும், அவருக்கும் 40 ஆண்டு கால நட்பு உள்ளது. மேலும் அவர், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது யாருக்கு பின்னடைவு என்பது அனைத்து அரசியல் கட்சிகள், தலைவர்களுக்கும் தெரியும்.
அதேநேரம் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா, விஜய்யுடன் சந்திப்பு தொடர்பாக என்னிடம் எதுவும் பேசவில்லை. மேலும் இத்தகைய முடிவை எதற்காக எடுத்தார் என்று அவர் கூறிய பின்னர் தான் தெரியும். எந்த கட்சியுடன் நாங்கள் கூட்டணி என்று இதுவரை முடிவு செய்யவில்லை. சில கட்சிகள் கூட்டணிக்கு வரவேண்டும் என்று எங்களுடன் பேசி வருவது உண்மை. அவை எந்த கட்சிகள் என்று கூறுவது நாகரிகமாக இருக்காது. கூட்டணி முடிவானதும் நானே கூறுகிறேன்.
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியதை பொறுத்து இருந்து பார்ப்போம். தமிழகத்தில் தற்போது 4 முனை போட்டி இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். அதன்மூலம் புதிதாக ஒரு கூட்டணி உருவாகும் வாய்ப்பு உள்ளது. அதை நோக்கி சில நகர்வுகள் நடக்கின்றன. தமிழகத்தில் தீவிரவாதம் எதுவும் இல்லை. ஆனால் போதைப்பொருட்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை அதிகமாக இருக்கிறது. அதை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்.
பொதுமக்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்கு மத்திய அரசு நிதிஒதுக்க வேண்டும். கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வந்து மக்கள் குடியேறுகின்றனர். எனவே மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி சரியாகவே நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.