கனமழை எச்சரிக்கை: மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.;

Update:2025-11-27 06:28 IST

சென்னை,

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வுமண்டலமாக இன்று வலுவடைகிறது. இதன் தொடர்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) காலைக்குள் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அன்றைய தினம் நள்ளிரவு வட இலங்கையையொட்டிய கடல் பகுதியில் புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது.

இதைத்தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் 29-ந்தேதி (சனிக்கிழமை) காலை தமிழ்நாட்டின் டெல்டா கடற்கரைப் பகுதியை வந்தடையும் என்றும், டெல்டா பகுதிகளில் புயலின் முன் பகுதி நுழையும் அதாவது நிலப்பகுதிகளில் ஊடுருவும் என்றும், பின்னர் வடக்கு திசையில் சென்னை நோக்கி நகர்ந்து, 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு சென்னைக்கு அருகில் கரையை கடக்கவோ அல்லது கரைக்கு அருகில் நிலைக்கொள்ளவோ வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வருகிற 28, 29, 30-ந் தேதிகளில் மூன்று நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதற்கிடையே கனமழையை எதிர்கொள்வதற்கான ஆயத்த நடவடிக்கைகள் குறித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், சென்னை எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் நேற்று ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்