செங்கோட்டையன் வெளியேறியது அதிமுகவுக்கு பின்னடைவு: திருமாவளவன்

எஸ்.ஐ.ஆர். நடைமுறைக்கு எதிராக ஒருங்கிணைய வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.;

Update:2025-11-27 06:44 IST

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மூத்த தலைவர் செங்கோட்டையன், அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறியது எடப்பாடி பழனிசாமிக்கும், அந்த கட்சிக்கும் பின்னடைவாக அமையும். அவரது முடிவின் பின்னணியில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் கைகளும் நீண்டு இருக்குமா? என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே பா.ஜனதாவினர் தன்னை டெல்லிக்கு அழைத்தார்கள் என செங்கோட்டையன் ஒப்புதல் வாக்குமூலம் கூறியிருக்கிறார்.

அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தும் விதமாக பா.ஜனதா செயல்பட்டு வருகிறது. இது அ.தி.மு.க.வுக்கும், தமிழக அரசியலுக்கும் நல்லதல்ல என, நான் ஏற்கனவே கூறி வருகிறேன். அதுகுறித்து அ.தி.மு.க. தலைமை சிந்திக்கும் என நம்புகிறேன்.

தமிழக கவர்னர், திரும்பத்திரும்ப தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், திராவிட அரசியலுக்கு எதிராகவும் கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசுக்கு பலமுறை வலியுறுத்தி இருக்கிறோம். அவரை பயன்படுத்தி தமிழக அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த மத்திய அரசு நினைப்பது கவலை அளிக்கிறது.

அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. ஆனால் சனாதன, மதவாத சக்திகளால் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்து உள்ளது. அவற்றிடம் இருந்து நாட்டையும், மக்களையும், சட்டத்தையும் பாதுகாக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

கடந்த காலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடைபெற்று இருந்தாலும், இந்த அளவுக்கு பேசுபொருளாக மாறியதில்லை. தற்போது தேசிய அளவில் அது குறித்த விவாதம் நடைபெறுகிறது. அதற்கு அவர்களின் அணுகுமுறைகளும், யுக்திகளுமே காரணம். எனவே ஜனநாயக சக்திகள் இந்த எஸ்.ஐ.ஆர். நடைமுறைக்கு எதிராக ஒருங்கிணைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்