வங்கியில் ரூ.1.5 கோடி தங்கத்தை விட்டுச்சென்ற முன்னாள் பெண் மேலாளர்: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

5 நாட்கள் ஆன நிலையிலும் அந்த பெண் வங்கிக்கு வராததால் இதுபற்றி வேளச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.;

Update:2025-12-12 07:02 IST

கோப்புப்படம்

வேளச்சேரி,

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள பிரபல தனியார் வங்கி கிளைக்கு கடந்த 5-ந்தேதி தேதி பர்தா அணிந்த பெண் ஒருவர் வந்தார். அவர், வங்கி மேலாளரை சந்தித்து தனது பெயரில் வங்கி கணக்கு மற்றும் லாக்கர் தொடங்க வேண்டும் என்றார். ஆனால் அதற்கு தேவையான ஆவணங்கள் அவரிடம் இல்லை என்பதால் அதை எடுத்து வருவதாக கூறிச்சென்று விட்டார்.

அப்போது அவர் அமர்ந்து இருந்த இருக்கையில் அவரது பையை தவறவிட்டு சென்றுவிட்டார். அதில் 24 காரட்டில் ஒரு கிலோ தங்க கட்டி மற்றும் 22 காரட்டில் 256 கிராமில் ஒரு தங்க சங்கிலி மற்றும் ஒரு வளையல் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.1.50 கோடி ஆகும். 5 நாட்கள் ஆன நிலையிலும் அந்த பெண் வங்கிக்கு வராததால் இதுபற்றி வேளச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வேளச்சேரி குற்றப்பிரிவு போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், நகையை விட்டுச் சென்றது, அதே வங்கியின் முன்னாள் மேலாளரான பத்ம பிரியா (37) என்பது தெரிய வந்தது. வேளச்சேரியில் உள்ள விடுதியில் தங்கி உள்ள அவரிடம் போலீசார் விசாரித்தனர்.

பத்மபிரியா அந்த வங்கியில் ஒரு வருடமாக மேலாளராக பணி செய்து வந்தார். அவரது கணவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு கடன் கொடுத்தவர்கள் பத்மபிரியாவுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் அந்த வங்கியின் லாக்கரில் இருந்த வெளி நாட்டு வாழ் இந்தியரின் 250 கிராம் நகைகளை திருடி உள்ளார். இதையடுத்து அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு வாரத்துக்கு முன்பு அவர் ஜாமீனில் வெளிவந்து உள்ளார்.

இதேபோல் மற்றொரு வாடிக்கையாளரின் லாக்கரில் இருந்தும் தங்க கட்டி மற்றும் நகைகளை திருடி இருந்ததால் மீண்டும் கைது செய்யப்படுவோமோ என பயந்து அவற்றை வங்கி லாக்கரில் வைப்பதற்காக வங்கிக்கு வந்துள்ளார். ஆனால் லாக்கரில் வைக்க முடியாததால் நகையை வங்கியில் விட்டுச்சென்றதும், தன்னை அடையாளம் தெரியாமல் இருக்க பர்தா அணிந்து வந்ததும் தெரியவந்தது.

பத்மபிரியா மீது எந்த ஒரு புகாரும் இல்லாததால் சம்பந்தப்பட்ட லாக்கர் வாடிக்கையாளரிடம் புகார் பெற்று அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வங்கி அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்