மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குவது ஏன்? - அமைச்சர் முத்துசாமி விளக்கம்
மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குவது ஏன்? என்பது குறித்து அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார்.;
ஈரோடு,
ஈரோட்டில் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுபாட்டில்களை மதுப்பிரியர்கள் சாலைகளில் வீசுவது, வயல்கள், நீரோடைகளில் வீசுவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் மது வாங்குபவர்களிடம் பாட்டில் ஒன்றுக்கு தலா ரூ.10 கூடுதலாக வாங்கப்படுகிறது.
மதுகுடித்து விட்டு பாட்டிலை திரும்பவும் கடையில் ஒப்படைத்தால் அந்த பாட்டிலுக்கு ரூ.10 திரும்ப வழங்கப்படும். மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தில் துறையின் அமைச்சராகிய என்னுடன் கடைக்கோடி பணியாளர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும். ஒருங்கிணைந்து பணியாற்றினால் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.