கவர்னர் ஆர்.என்.ரவி மாற்றமா? திடீரென பரவிய பரபரப்பு தகவல்
கவர்னர் ஆர்.என்.ரவி துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்களில் கூறப்படுகிறது.;
சென்னை,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாற்றப்படுவார் என்று அடிக்கடி சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவுவதும் பிறகு அது வதந்தி என்று அறிவிக்கப்படுவது வழக்கமாகி விட்டது. அந்த வகையில் நேற்று முதல் சமூக வலைதளங்களில் கவர்னர் ஆர்.என்.ரவி மாற்றப்படுவார் என்று புதிய தகவல் பரவி வருகிறது.
தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்பதற்கு முன்பு 2 ஆண்டுகள் நாகலாந்து மாநிலத்தில் கவர்னராக இருந்தார். அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு தொடர்ந்து 4 ஆண்டுகளாக அவர் கவர்னர் பதவியில் இருக்கிறார். வருகிற செப்டம்பர் மாதம் வந்தால் அவர் தொடர்ச்சியாக கவர்னர் பதவியில் இருப்பது 6 ஆண்டுகளை நிறைவு செய்தற்கு சமமாகும். கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் அவர் கவர்னர் பதவியில் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இதனால்தான் அவர் எந்த நேரத்திலும் மாற்றப்படுவார் என்று அடிக்கடி தகவல் பரவுகிறது. தற்போதும் அதன் அடிப்படையில்தான் தகவல் பரவி இருப்பதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.கவர்னர் ஆர்.என்.ரவி துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படலாம் என்றும் அந்த தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதனை கவர் மாளிகை அதிகாரிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். கவர்னர் ஆர்.என்.ரவி தற்போது ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் சுதந்திர தினத்தன்று விருந்து தொடர்பாக அவர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.