வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 20 சவரன் தங்கநகை கொள்ளை: பெண் கைது

வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்த நிலையில் பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.;

Update:2025-05-20 21:42 IST

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் முனுசாமி. இவர் டெய்லராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16ம் தேதி காலை 11 மணியளவில் இவர் மற்றும் இவரது மகள் சுகந்தி புத்துக்கோவில் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். பின்னர் இவரது மனைவி ராஜேஸ்வரி வீட்டை பூட்டி விட்டு பசு மாட்டை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

கோவிலுக்கு சென்று இருந்த முனுசாமி மற்றும் அவரது மகள் சுகந்தி பிற்பகல் வீட்டிற்க்கு வந்து பார்த்தபோது வீட்டின் உள்புற தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. பின்னர் பின்பக்க வழியாக உள்ளே சென்று பார்த்தபோது அறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்த நிலையில் பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் பின்பக்க வழியாக வீட்டிற்குள் வந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 20 சவரான் தங்க நகைகள் மற்றும் 14 ஆயிரம் ரொக்கம் கொள்ளை அடித்து சென்று இருப்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து முனுசாமி கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை அடித்த மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், முனிசாமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கீதா என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. அதன்படி, முனிசாமி குடும்பத்தினருடன் வெளியே சென்றிருப்பதை அறிந்த கீதா, அவரது வீட்டின் பின்பக்க கதவை இரும்பு கம்பியால் உடைத்து உள்ளே சென்று 20 சவரன் தங்கநகை மற்றும் 14 ரூபாய் பணத்தை கொள்ளையடித்தது சென்றுள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகையை வாணியம்பாடியில் உள்ள அடகுகடையில் அடகு வைத்து பணம் பெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கீதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்