வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10.87 லட்சம் மோசடி: டெல்லியில் பெண் கைது

பண மோசடி போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-06-19 15:10 IST

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரை சேர்ந்த மாயாண்டி (வயது 58) என்பவரிடம், அவரது மகனுக்கு வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவரை நம்ப வைத்து அவரிடம் இருந்து பல்வேறு தவணைகளில், ரூ.10 லட்சத்து 87 ஆயிரம் பணத்தினை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக மாயாண்டி, திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். அதன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவில் 2023-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்து வந்த நிலையில், அவர்களை கைது செய்ய மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின்பேரில், தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு, பல்வேறு மாநிலங்களில் சென்று தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளி ரெஜின் என்பவரை சென்ற ஆண்டு மும்பையில் வைத்து திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த மற்ற குற்றவாளிகளையும் கைது செய்ய மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. விஜயகுமார் மற்றும் வழக்கின் புலனாய்வு அதிகாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வழக்கின் மற்றொரு குற்றவாளியான உமா என்பவர் புதுடெல்லியில் இருந்து வருவதாக தொழில்நுட்ப உதவியுடன் கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டு முத்துராமலிங்கம், பெண் காவலர்கள் செல்வி, பரமேஸ்வரி, பகவதி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்கள் புதுடெல்லி சென்று அங்கு தலைமறைவாக இருந்த குற்றவாளி உமாவை (வயது 40) கைது செய்து, இன்று (19.6.2025) திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, காவலுக்கு உட்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு தலைமறைவாக இருந்து வந்த எதிரியை டெல்லி சென்று கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரை, மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார். மேலும் அவர் பொதுமக்கள் வெளிநாட்டு வேலை, அரசு மற்றும் தனியார் வேலைகளை இடைத்தரகர் மூலம் பெரும் முயற்சியில் அவர்களை நம்பி பணத்தை இழந்து ஏமாற வேண்டாம் என்று அறிவுரை வழங்கியதோடு, இத்தகைய மோசடி குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்