சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு சாகும் வரை சிறை - போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.;
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா கார்ணாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் (25 வயது). இவர் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ந்தேதி விளையாடி கொண்டிருந்த 3-ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியை அங்குள்ள ஒருவரின் வீட்டின் மாடிக்கு தூக்கி சென்றுள்ளார். பின்னர் அவர் செல்போன் மூலம் அச்சிறுமிக்கு ஆபாச படம் காண்பித்து சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி அழுதபடி வந்து தனது தாயிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளாள். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அரவிந்தை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி காஞ்சனா தீர்ப்பு வழங்கினார். அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அரவிந்துக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.