காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் - சாதுர்யமாக பேசி காப்பாற்றிய பெண் காவல் உதவி ஆய்வாளர்

சென்னை மாம்பலத்தில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை, பெண் காவல் உதவி ஆய்வாளர் சாதுர்யமாக பேசி காப்பாற்றினார்.;

Update:2025-06-23 20:51 IST

சென்னை மாம்பலத்தில் காதல் தோல்வியால் 4-வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற பெண்ணை சாதுர்யமாக பேசி காப்பாற்றிய பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

27 வயது இளம்பெண் ஒருவர் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொள்வதற்காக கைகளை அறுத்துக் கொண்டு 4-வது மாடியிலிருந்து குதிக்க முயன்றார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் கீழ்த்தளத்திலிருந்து அந்த பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் அந்த இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட காவல் உதவி ஆய்வாளர் மீரா, அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறிக்கொண்டே வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் ஜன்னல் வழியாக கீழே குதிப்பதற்காக அமர்ந்திருந்த அந்த பெண்ணை மீரா காப்பாற்றினார். இதையடுத்து அந்த பெண் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை சாதுர்யமாக பேசி காப்பாற்றிய காவல் உதவி ஆய்வாளர் மீராவுக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்